டில்லி,
மத்திய அரசு சமீபத்தல் அறிவித்துள்ள இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.
ஐதராபாத்தை சேர்ந்த தனியார் அமைப்பு உச்சநீதி மன்றத்தில் கடந் 7ந்தேதி மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்தது.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட், 2 வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், கால்நடை சந்தைகளில், இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்தது. பசு, எருது, எருமை, கன்று குட்டி, கறவை மாடுகள், ஒட்டகம் உட்பட கால்நடை கள் விற்பனைக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதற்கு கேரளா, மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.