சென்னை,

த்திய அரசு கொண்டு வந்துள்ள பசுவதை தடுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தமிழக எதிர்கட்சி தலைவர்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது, மாட்டிறைச்சி விற்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை புகுத்தி  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்  சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதை நாடு முழுக்க தடை செய்வதாக அறிவித்தது.

இந்த சட்டதிருத்தத்துக்கு நாடு முழுவதும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தனி மனித சுதந்திரத்தில் மத்தியஅரசு தலையிடுவதாக கருத்துதெரிவிக்கப்பட்டு கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த சட்டத்திருத்தத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என  புதுச்சேரி, கேரள, கர்நாடக, மேற்கு வங்க முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால், தமிழக முதல்வரிடம் இருந்து  எப்போதும்போல அமைதி மட்டுமே பதிலாக உள்ளது.

இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த பிரச்சினையை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளன.

மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலைசிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி போன்ற அனைத்து எதிர்க்கட்சி களும் இணைந்த கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

அதில்,

பசுவதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்,

உணவுக்கான உரிமையை மத்திய அரசின் முடிவு தகர்த்து எறிகிறது,

எதை உண்ண வேண்டும் என சொல்ல அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

மத்திய அரசின் முடிவு ஒற்றை கலாசாரத்தை திணிக்கும் பண்பாட்டு சர்வாதிகாரம்.

கட்டுப்பாடுகளை ரத்து செய்யாவிட்டால், மக்களை திரட்டி போராட்டம்

மத்திய அரசின் முடிவால் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம்.

தமிழக அரசு மவுனத்தை கலைத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் 

 என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஸ்டாலின், திருநாவுகரசர், முத்தரசன், ராமகிருஷ்ணன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டு உள்ளனர்.

தமிழக எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி வர இருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலிக்கும் என தெரிகிறது.