சென்னை,
மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள சட்டதிருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மாணவர்களிடையேயும் பயங்கர கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது,.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், 1960ம் ஆண்டு வெளியிடப்பட்ட மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் இனிமேல் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மற்றும் இடது சாரிகள் ஆட்சி நடக்கும் கேரள மாநில முதல்வர்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
கேராளாவில் பல்வேறு இடங்களில் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் மாட்டிறைச்சி உணவு உண்ணும் போராட்டங்களை நடத்தின.
தமிழகத்திலும் இன்று சென்னை,மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி மாணவர்கள் ஒரு பிரிவினர் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா நடத்தினர்.
நேற்று இரவு ஐஐடி வளாகத்தில்நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுகூடி, மத்திய அரசின் அறிவிப்பு உணவு சர்வாதிகாரம் என்று கூறினர்.
மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு காட்டவே தற்போது நாங்கள் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், தாங்கள் எந்தவொரு அமைப்பையும் சாராதவர்கள் என்றும் கூறினர்.
மேலும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறி, தாங்கள் கொண்டு வந்திருந்த பிரட் மற்றும் மாட்டுக் கறி ஆகியவற்றை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.
ஐஐடி மாணவர்களின் மாட்டுக்கறி உண்ணும் புகைப்படம் மற்றும் ஒளிப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மட்டுமின்றி தற்போது மாணவர்களிடையேயும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.