டில்லி
இந்தியாவில் போதுமான கொரோனா தடுப்பூசி இல்லை என்பதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதில் உலக நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. நேற்று தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தைத் தாண்டிய நிலையில் நேற்று வரை 1.33 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 1.69 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1.20 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 11.02 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மத்திய அரசு தற்போது கொரோனா தடுப்பூசியை 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தி வருகிறது. ஆனால் பல்வேறு வயதினரும் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் அனைத்து வயதினருக்கு தடுப்பூசி போட வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், “போதுமான அளவில் கொரோனா தடுப்பூசி இல்லாவிட்டால் கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. பாஜக அரசின் அகங்காரம் மற்றும் திறமை இன்மையால் கொரோனா பரவல் அதிகரித்து மக்களும் மற்றும் நாட்டின் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோருக்கு நிவாரண உதவிகள் அளிப்பதில்லை. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்குப் பாதுகாப்பு இல்லை. நீங்கள் மாம்பழம் சாப்பிட நினைப்பதில் தவறில்லை. அதில் குறைந்த அளவையாவது சாமானிய மனிதருக்கு அளிக்க வேண்டும்” எனப் பதிந்துள்ளார்.