டில்லி
பணமதிப்பு குறைப்பு காரணமாக அரசுக்கு ரிசர்வ் வங்கி தர வேண்டிய சென்ற வருட பங்குத் தொகை பாதியாக குறைந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும், ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு பங்குத்தொகை வழங்கி வருவது தெரிந்ததே. அதன் படி சென்ற வருடம் 658.76 பில்லியன் ரூபாய்கள் ரிசர்வ் வங்கி அரசுக்கு வழங்கியது. ஆனால் இந்த வருடக் கணக்கின்படி 306.59 பில்லியன் மட்டுமே வழங்கும் என தெரிய வந்துள்ளது. இது சென்ற வருடத்தில் வழங்கிய தொகையில் பாதிக்கும் குறைவானதாகும்.
இதற்கு முக்கிய காரணம் சென்ற வருடம் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு குறைப்பின் விளைவே என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ரிசர்வ் வங்கி புதிய கரன்சி நோட்டுக்கள் அச்சடிப்பு, பழைய நோட்டுகளை முழுவதுமாக மாற்றுதல் போன்ற அதிக செலவு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த நடவடிக்கையால் ரிசர்வ் வங்கிக்கு எவ்வளவு செலவானது என்பதை ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை.
ரிசர்வ் வங்கியில் இருந்து வரும் வருமானம் குறைந்ததினால், ஏற்கனவே பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்குதல் செய்துள்ள மத்திய அரசுக்கு மேலும் பணத் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிய வருகிறது. இதனால் அரசு வருமான இழப்பை ஈடுகட்ட வேறு எந்த முறையில் ஈடுகட்டப் போகிறது என்பதை பொருளாதார ஆர்வலர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.