உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடுவதா, இல்லையா என்பதை மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

bcci

ஒருநாள் உலக கோப்பை தொடர் மே மாதம் 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஜூன் மாதம் 16ம் தேதி விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாட வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் உலகக் கோப்பை 2019போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்க, உச்சநீதிமன்ற பரிந்துரைத்த ஓய்வுப் பெற்ற லெஃப்டினண்ட் ஜெனெரல் ரவீந்திர தோட்கே உடன் பிசிசிஐ தலைவர் வினோத் ராய் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் பேசிய பிசிசிஐ தலைவர் வினோத் ராய், “ இது இருநாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனை. எந்த முடிவையும் பிசிசிஐ தனியாக எடுக்க முடியாது. எதுவாக இருந்தாலும் மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு எந்த முடிவெடுத்தாலும் அதன்படி பிசிசிஐ நடக்கும்” என தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானிற்கு எதிரான எங்களது கருத்தை சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு எழுதி அனுப்பியுள்ளோம் எனவும் வினோத் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து உலகக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவது குறித்து முடிவெடுப்பது பிரதமர் கையில் தான் உள்ளது.