ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல், அதற்கு செலவிடப்படும் தொகையை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இதனை தொடர்ந்து உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது பிசிசிஐயும் இணைந்துள்ளது. இந்த வருடம் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என அனைவரும் கூறிவந்த நிலையில், அது குறித்து முடிவெடுக்க பிசிசிஐ முக்கிய ஆலோசனை நடத்தியது.
அதன்படி பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் இடம்பெற்றனர். ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து பிசிசிஐ தலைவர் பேசும்போது,” புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லபப்ட்ட வீரரகளின் குடும்பத்தினருக்கு உதவ பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடக்க விழாவின் நிகழ்ச்சிகள் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்படும். இதில் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என பலரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிரிழப்பை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படாது.
அதற்கு பதிலாக அந்த நிகழ்ச்சிக்கு செலவிடப்படும் தொகை அனைத்தையும், தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அளிக்கப்படும். இந்த முடிவு இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டது “ என கூறினார்.
மேலும், உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் இது இரு நாட்டிற்கும் இடையேயான பிரச்சனை. தனிப்பட்ட முடிவை பிசிசிஐ எடுக்க முடியாது எனவும் வினோத் கூறினார்.