2019-ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்துடன் விளையாடக் கூடிய சூழல் ஏற்பட்டால் இந்தியா விளையாடும் என்றும், மத்திய அரசு பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம் என கருதினால் இந்திய அணி விளையாடாது எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வாரம் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக பலதரப்பினரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசும் பாகிஸ்தானுக்கு எதிராக பொருளாதார நெருக்கடி நடவடிக்கையையும், ராணுவத்தின் மூலம் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க வரும் மே மாதம் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அமைப்பின் செயலாளரும் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் கூட உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்க வேண்டுமென கூறினார். இந்நிலையில், உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையில் இந்தியா ஜூன் 16ம் தேதி பாகிஸ்தானுடன் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிட்ட தேதியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்க்கொள்ளவில்லை எனில் தரவரிசையில் நாம் புள்ளிக்களை இழக்க நேரிட்டு தகுதி போட்டிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் நாம் விளையாடாவிட்டால் கோப்பையை இழக்க நேரிடும் என இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் அணியுடன் விளையாட வேண்டாமா, இல்லையா என்பதை மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டுமெனவும் பிசிசிஐ கூறியுள்ளது.