மும்பை: உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்றும், உலகளவில் அதிக சக்திவாய்ந்த கிரிக்கெட் அமைப்பு என்றும் கூறப்படும் பிசிசிஐ, தனது வீரர்களுக்கு, கடந்த 10 மாதங்களாக ஒப்பந்த தொகை தவணையை அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவல் விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடைமுறையில், ஒப்பந்தத் தொகை என்பது, வீரர்களுக்கு 4 தவணைகளாக அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஆங்கில ஊடகம் ஒன்றின் தரப்பில் வெளியாகியிருக்கும் செய்தில் கூறப்பட்டுள்ளதாவது; பிசிசிஐ உயர்மட்ட வீரர்கள் ஒப்பந்தத்தில் இருக்கும் 27 வீரர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் காலாண்டு தவணையில் முதல் தவணை சம்பளம் கூட கொடுக்கப்படவில்லை.

அதேபோல், வீரர்களுக்கு 2019 டிசம்பர் முதல் விளையாடிய 2 டெஸ்ட் போட்டிகள், 8 டி20 போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகளுக்கான சம்பளமும் வழங்கப்படவில்லை.

ஒப்பந்தத்தில் ‘ஏ’ பிளஸ் பிரிவில் உள்ள விராத் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா ஆகியோருக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி கிடைக்கும். ஏ,பி,சி கிரேடில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு முறையே ரூ.5 கோடி, ரூ.3 கோடி மற்றும் ரூ.1 கோடி கிடைக்கும்.

பொதுவாக 4 தவணைகளாக ஒப்பந்தத் தொகை அளிக்கப்படும் என்ற நிலையில், தற்போது முதல் தவணையே இன்னும் வீரர்களுக்கு அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.