டெல்லி; வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008இல் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் கடந்த 15 வருடங்களில் பிரமாண்டமான வளர்ச்சியை பெற்றுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள உலக கிரிக்கெட் வீரர்கள் ஆர்வமான உள்ளனர். இதையடுத்து, வேறு பல நாடுகள் டி20 தொடர் போட்டிகளை தொடங்கின.   ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு வாரியங்கள் தங்களது நாடுகளில் பிரத்தியேக டி20 தொடரை நடத்தினாலும் அவற்றால் ஐபிஎல் உச்சத்தை எட்ட முடியவில்லை.

அதுபோல, ஐபிஎல் போலவே அதில் அணிகளை வைத்துள்ள நிர்வாகங்கள் மேலும் பணக்காரர்களாகி வெஸ்ட் இண்டீஸ், துபாய், தென்னாபிரிக்கா போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடரில் தங்களது கிளைகளை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துபாய் மற்றும் தென் ஆப்பிரிக்க டி20 தொடர்கள் வரும் 2023 ஜனவரியில் நடைபெற உள்ளது. அதில் ஐபிஎல் தொடரை போலவே நிறைய வெளிநாட்டு வீரர்களை பங்கேற்க வைப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தடை விதித்துள்ளது. UAE மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ள டி20 லீக்கில், ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ளதை அடுத்து BCCI நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோல ஆஸ்திரேலிய ஜாம்பவான் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் தங்களது நாட்டு வீரர்கள், இந்த போட்டிகளில் கலந்துகொள்வதற்கு அதிருப்தி தெரிவித்து உள்ளார்.  2023ம் ஆண்டு  ஜனவரியில்  துபாய் டி20 தொடரில் விளையாட டேவிட் வார்னர் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் முடிவெடுத்துள்ள நிலையில் கில்கிரிஸ்ட்,  ஐபிஎல் என்பது உலக கிரிக்கெட்டை அதிகாரம் செய்யும் அமைப்பாக மாறுவது சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆபத்தானது என்று குற்றம் சாட்டி உள்ளார்.