மும்பை

தமிழகம், அரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநில கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள்,  பிசிசிஐயின் பொதுக்குழு கூட்டத்திலும், தேர்தலில் வாக்களிக்கவும் கிரிக்கெட் நிர்வாகக் குழு (சிஓஏ) தடை ( Committee of Administrators – CoA) விதித்துள்ளது.

தமிழக கிரிக்கெட் சங்கத்துக்கு சமீபத்தில்தான் ரூபா குருநாத் தலைவராக தெர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், சிஓஏ தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்திய கிரிக்கெட்டில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்ததையொட்டி உச்சநீதிமன்றம் முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைத்தது.  அந்தக் குழு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு சில சீர்திருத்தத் தீர்மானங்களை அறிவித்தது.   இதற்குப் பல மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஒப்புக் கொள்ளவில்லை.  இந்த விவகாரம் சுமார் 3-4 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தின் பொதுக் குழுக் கூட்டம் வரும் 23 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.  அப்போது குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.   இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளவும் வாக்களிக்கவும் மூன்று மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  அவை தமிழகம், அரியானா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் ஆகும்.   லோதா சீர்திருத்தங்களை இந்த சங்கங்கள் ஏற்காததால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிக்கை சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது   அத்துடன் இதன் நகல் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்தல் அதிகாரி கோபால் சாமிக்கு அனுப்பப்பட்டுள்ளது.   இந்த தடையில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக கிரிக்கெட் சங்க செயலர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

லோதா குழுவின் பரிந்துரைகளில் முக்கியமான இரு பரிந்துரைகளை தமிழக கிரிக்கெட் சங்கம் ஏற்காமல் உள்ளது.   அவற்றில் ஒன்று தமிழக கிரிக்கெட் சங்கம் இந்த பரிந்துரைகளுக்கு எதிராக ஒரு துணைத் தலைவருக்குப் பதில் இருவரை தேர்ந்தெடுத்துள்ளது.  மற்றது தங்களது நிர்வாகிகளுக்குப் பதவிக் காலம், வயது வரம்பு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை ஏற்காததும் ஆகும்.