லண்டன்:

புகழ் பெற்ற பி.பி.சி. வானொலியின் தமிழ் நிகழ்ச்சியான “தமிழோசை” வரும் 30ம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.

இங்கிலாந்து அரசு பி.பி.சி. வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களை நடத்தி வருகிறது. 1927-ம் ஆண்டு பி.பி.சி. வானொலி இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.  முதலில் ஆங்கிலத்தில் ஒலிபரப்பை தொடங்கிய இந்த வானொலி பிறகு  பல்வேறு மொழிகளிலும் ஒலிபரப்பியது.

தற்போது பி.பி.சி. வானொலி 27 பிராந்திய மொழிகளில் ஒலிபரப்புகளை நடத்துகிறது.  இதில், தமிழோசை என்ற தமிழ் ஒலிபரப்பும் ஒன்றாகும்

இந்த தமிழ் ஒலிபரப்பு 1941-ம் ஆண்டு துவங்கப்பட்டது. சிற்றலையின் ஒலிபரப்பாகி வரும் இதில் செய்திகள் மற்றும் பல்வேறு  நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன.

பி.பி.சி. செய்திகள் மிகுந்த நம்பகத்தன்மையுடன் இருந்ததால் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் தமிழோசை நிகழ்ச்சியை விரும்பி கேட்டனர்.

ஒரு காலகட்டத்தில் ஈழத்தில் நடந்த யுத்தம் பற்றி பி.பி.சி மட்டுமே சரியான தகவல்களை அளித்தது குறிப்பிடத்தக்கது. தமிழோசை அறிவிப்பாளர் ஆனந்திதான் அந்த காலகட்டத்தில் யுத்தம் நடக்கும் ஈழப்பகுதிக்குச் சென்று பேட்டிகளை எடுத்தார்.

சங்கர், ஆனந்தி ஆகியோர் செய்தி தரும் முறையும், நாடகங்களை உருவாக்கி அளித்த விதமும் ரசிகர்களைக் கவர்ந்தது.

தற்போது செய்தி தொலைக்காட்சிகளும், இணையதள இதழ்களும்  தொடர்ந்து செய்திகளைத் தந்து வருவருவதாலும், சமூகவலைதளங்களின் பயன்படு அதிகரித்துவிட்டதாலும் வானொலி கேட்போரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இதனால் பல பிராந்திய மொழி ஒலிபரப்புகளை பி.பி.சி. நிறுத்தி விட்டது. தற்போது பி.பி.சி. சிற்றலை தமிழ் ஒலிபரப்பையும்  நிறுத்த முடிவு செய்துள்ளது.

வரும்  30-ந் தேதியுடன் இந்த ஒலிபரப்பு நிறுத்தப்படுகிறது. கடந்த  76 ஆண்டுகளாக தொடர்ந்து  ஒலிபரப்பாகிவந்த பிபிசியின் தமிழோசை  நிறுத்தப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரம்,  பி.பி.சி.யின்  இணைய தளம் மூலம் தமிழோசை தொடர்ந்து ஒலிபரப்பப்படும் என்று பி.பி.சி. அறிவித்துள்ளது.  மேலும்,
இலங்கையில் மட்டும் தனியார் வானொலியுடன் சேர்ந்து எப்.எம். ஒலிபரப்பில் 5 நிமிட பி.பி.சி. செய்திகள் ஒலி பரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.