ரிபப்ளிக் டிவி புகார் எதிரொலி : அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு

லிகார்

லிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரில் அமைந்துள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்.  இங்கு நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு மஜிலிஸ் ஈ கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசாதுதின் ஓவசியை மாணவர் சங்கத்தினர்  அழைத்துள்ளனர்.

பாஜக இளைஞரணி மாணவர்கள் ஓவைசியின் வருகையை எதிர்த்து நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.    ஓவசியின் வருகையை எதிர்த்து ஆர் எஸ் எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்ததி பரிஷத் அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பல்கலைக் கழக வளாகத்தில்  கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் வாகனங்களை எரித்ததாக பாஜக இளைஞரணியும் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பும் புகார் அளித்தன.

இந்த நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்க வந்த பாஜக ஆதரவு தொலைக்காட்சியான ரிபப்ளிக் டீவி மாணவர்களிடம் நேர்காணல் நடத்தியது. அப்போது மாணவர் சங்கத்தின் சார்பில் கூட்டம் ஒன்று நடந்துக் கொண்டு இருந்துள்ளது. ஆகவே கூட்டம் முடியும் வரை டிவி குழுவினரை மாணவர்கள் காத்திருக்க சொல்லி உள்ளனர்.  ஆனால் இதற்கு டிவி குழுவினர் மறுத்துள்ளனர்.

ஆயினும் எந்த மாணவரும் நேர்காணலில் கலந்துக் கொள்ளாததால் டிவி குழுவினர் காத்திருக்க நேர்ந்துள்ளது.   இந்நிலையில் சுமார் 3 மணிக்கு இந்த கூட்டம் நடந்துக் கொண்டிருக்கும் போதே ரிபப்ளிக் டிவி செய்தியாளர் நளினி சர்மா, “நாம் இப்போது பயங்கரவாதிகளில் பல்கலைக்கழகத்தில் நின்றுக் கொண்டிருக்கிறோம்” என மைக்கில் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் கோபமடைந்த மாணவர்கள் ரிபப்ளிக் டிவி குழுவினரை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர். அதை ஒட்டி ரிபப்ளிக் டிவி குழுவினர் தங்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில் தாங்கள் செய்தி சேகரிக்க சென்ற போது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பியதாகவும் அத்துடன் தங்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடிப்படையாக கொண்டு அலிகார் காவல்துறையினர் மாணவர் சங்கத்தை சேர்ந்த 14 பேர் மீது தேசத் துரோகம், கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளுக்கு மேல் வழக்கு பதிந்துள்ளனர்.

இந்த 14 மாணவர்களில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவர் சல்மான் இம்தியாஸ் மற்றும் துணைத்தலைவர் அமீர் ஆகியோரும் உள்ளனர்.

இதை ஒட்டி மாணவர் சங்கத்தினர் பாஜக இளைஞர் அணியினர், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர், தொலைக்காட்சி ஊழியர் உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Aligarh muSlim University, Owaisi invited, Rapublic tv complaint, Sedition charges, students association, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஓவைசிக்கு அழைப்பு, தேச துரோக வழக்கு, மாணவர் சங்கம், ரிபப்ளிக் டிவி புகார்
-=-