கிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மேலும்  5,679 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,69,370 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு  நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளாகி வருகின்றனர். ஏற்னவே 20க்கும் மேற்பட்ட பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது   கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, அவர்  சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது சொந்த ஊர் பர்கூர் அருகே சிந்தகம்பள்ளி. சமீப நாட்களாக கட்சி கூட்டங்களிலும், பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் வந்தது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.