“மாட்டுக்கறி திண்பர்கள் காட்டுமிராண்டிகள்” என்று பொருள்படும்படி “குமுதம் ரிப்போர்ட்டர்” வாரமிருமுறை இதழ் கார்டூன் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி விருந்தில் பங்கேற்ற ஆய்வு மாணவர் சூரஜ் மீது ஒரு பிரிவு மாணவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிருகவதை தடுப்புச் சட்டத் திருத்தத்தில் புதியதாக 2 சரத்துகளைச் சேர்த்து புதிய உத்தரவு ஒன்றை கடந்த மே 26ம் தேதி மத்திய பா.ஜ.க. அரசு வெளியிட்டது. இதன்படி, இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்கத் தடை விதித்தது. மேலும், மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி மாநில முதல்வர்கள் இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுதும் மாணவர்கள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த மே 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி விருந்து நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடந்த இந்த விருந்தில் ஐ.ஐ.டி.யில் படிக்கும் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இவர்களில் கேரளாவைச் சேர்ந்த ஆய்வு மாணவர் சூரஜ் என்பவரும் ஒருவர். இவர் கடந்த மே 30ஆம் தேதி மதியம் வழக்கம்போல, சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள ஜெயின் விடுதியில் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது, அங்கு இருந்த சில மாணவர்கள் சூரஜ்ஜை , ’நீ மாட்டுக்கறி விருந்துக்கு சென்றுவிட்டு ஜெயின் சைவ விடுதியில் வந்து சாப்பிடுகிறாயா” என்று கேட்டு கடுமையாகத் தாக்கினர். தாக்குதலில் சூரஜ்ஜின் கண்களில் காயம் ஏற்பட்டது. அவர்சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மாணவர் சூரஜ் மீதான தாக்குதலுக்கு நாடு முழுவதிலுமிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சூரஜை, மருத்துவமனைக்குச் சென்று தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.
கேரளா முதலமைச்சர் பினரயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாணவர் சூரஜ்ஜை தாக்கியவர்கள் மீது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டார்.
இந்த நிலையில், ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மாட்டுக்கறி உண்டது குறித்து, இன்று வெளியான (06.06.2017 தேதியிட்ட) “குமுதம் ரிப்போர்ட்டர்” வாரமிருமுறை இதழில் கார்டூன் ஒன்று வெளியாகி உள்ளது.
இதில், “ஐ.ஐ.டியில படிச்சா, விஞ்ஞானியா வருவாங்கன்னு பார்த்தா, காட்டுவாசியா மாறிக்கிட்டு இருக்காங்களே” என்ற வாசகம் வருகிறது.
மாட்டுக்கறி உண்பவர்களை காட்டுமிராண்டி என்கிற அர்த்தத்தில் கூறும் இந்த கார்டூனுக்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.