
சென்னை,
பார் கவுன்சிலால் நீக்கப்பட்டு, வழக்கறிஞர் பணி செய்ய தடை விதிக்கப்பட்ட 742 பேரும் பணியை தொடரலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் தொழிலில் கட்டப்பஞ்சாயத்து அதிகம் இருப்பதாகவும், பலர் கல்லூரிக்கே செல்லாமல் தொலைதூரக் கல்வி மூலம் படித்து வழக்கறிஞர் ஆவதால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றும், இதுகுறித்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதி பால் கிருபாகரன் கூறி யிருந்தார்.
அதைத்தொடர்ந்து, பார் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்காமல் திறந்த நிலை பல்கலைக் கழகங்கள் மூலம் பட்டம் பெற்ற 742 வழக்குரைஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்கம் அண்மையில் உத்தரவிட்டது.
பார் கவுன்சிலின் இந்த உத்தரவை எதிர்த்து நாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, இடைநீக்கம் செய்யப்பட்ட 742 வழக்கறிஞர்களும் பணிபுரிய தடையில்லை என்றும், இதுதொடர்பாக பார்கவுன்சில் 3 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
[youtube-feed feed=1]