டெல்லி: வங்கிகளை தனியார்மயமாக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 10ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல இருப்பதாக  அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

மோடி தலைமையிலான மத்தியஅரசு, வங்கிகள் உள்பட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில்  நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டிலும், இரு அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்படும என்று அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த அறிவிப்புக்கு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்புகள் ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில்,  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட ஏஐபிஇஏ, ஏஐபிஓசி, என்சிபிஇ, ஏஐபிஓஏ, பிஇஎப்ஐ, ஐஎன்பிஓசி, என்பிபிசி, என்ஓபிஓ ஆகிய சங்கங்களும் கலந்துகொண்டு, மத்தியஅரசின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து, அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.ஹெச். வெங்கடாச்சலம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் போராட்டம் குறித்து அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

” வங்கிகள் தனியார் மயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தலைநகரங்களிலும் இன்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அடுத்த 15 நாட்களுக்கு நாடுமுழுவதும் இதுபோன்று போராட்டம் நடத்தப்படும்.

ஆனால் எங்கள் கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படாவிட்டால் மார்ச் 10-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும்போது, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்படும். மேலும் மார்ச் 15 மற்றும் 16-ம் தேதி இரு நாட்கள் தொடர்ந்து வங்கி வேலைநிறுத்தமும் செய்யப்படும்.

ஆனால், மத்திய அரசு தொடர்ந்து அதன் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்தால், போராட்டம் தீவிரமடைந்து, காலவரையற்ற போராட்டம் நடத்த வேண்டியது இருக்கும். மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்தபின், நாட்டின் வளர்ச்சிக்கு உதவி செய்ய எந்த தனியார் வங்கிகளும் முன்வரவில்லை. இதனால்தான் கடந்த 1969-ம் ஆண்டு பெரும்பான்மையான தனியார் வங்கிகளைத் தேசியமாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

கடந்த 1969ம் ஆண்டு நாட்டில் 8 ஆயிரம் வங்கிக் கிளைகள் இருந்த நிலையில், அதன்பின் தற்போது ஒரு லட்சம் வங்கிக் கிளைகளை வளர்ந்து நாட்டின் பொருளாதாரத்துக்கு வங்கிகள் பங்களிப்புச் செய்துள்ளன. இதில் ஏராளமான வங்கிகள் கிராமங்களில் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2010 முதல் 2020ம் ஆண்டுவரை தனியார் துறை வங்கிகள் மட்டும் ரூ.14,57,000 கோடி லாபம் ஈட்டியுள்ளன.

வங்கிகள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினை வாராக்கடன் மட்டும்தான். பெரும்பான்மையான வாராக்கடன் கோடீஸ்வரர்களிடமும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம்தான் இருக்கிறது. அவர்களுக்காக வங்கிகளைத் தனியார் மயமாக்கி அவர்களிடமே கொடுக்க மத்திய அரசு விரும்புகிறது.

தனியார் வங்கிகளும் இன்று சீர்குலைந்து இருக்கின்றன. கடந்த ஆண்டு யெஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி சிக்கலில் இருந்தன. ஐசிசிஐ வங்கியில் கூடபிரச்சினை இருக்கிறது. தனியார் துறை சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை ஏற்க முடியாது.

பொதுத்துறை வங்கிகள் மட்டுமே சாமானியர்களுக்கும், ஏழைகளுக்கும், வேளாண்மைக்கும், சிறு,குறுந்தொழில்களுக்கும் கடன் வழங்குகின்றன. தனியார் வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் உதவுகின்றன.

பொதுத்துறை வங்கிகள் இளைஞர்களுக்கு நிரந்தரவேலை வாய்ப்பு தருகின்றன. தனியார் வங்கிகள் ஒப்பந்தப்பணி மட்டும் தருகின்றன. வேலையில் இட ஒதுக்கீடும், பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கீடும் இல்லை.

மத்திய அரசு கோடிக்கணக்கான ஜன் தன் கணக்குகளை அரசு வங்கியில்தான் திறக்க அனுமதித்தது. மக்களின் சேமிப்பாக ரூ.146 லட்சம் கோடி வங்கிகளில் இருக்கிறது.

ஆதலால், மக்களின் மிகப்பெரிய சேமிப்புத் தொகையைத் தனியாரின் கைகளில் சேருவதற்கு அனுமதிக்கமாட்டோம். தனியார்மயம் என்பது மோசமான சிந்தனை.பொதுத்துறை வங்கிகள் வலிமைப்படுத்தப்பட வேண்டும். மக்களின் நலனே நாட்டின் நலன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.