மும்பை

காராஷ்டிரா மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட எட்டு பகுதி விவசாயிகளுக்கு கடன் வழங்க மகாராஷ்டிரா வங்கி மறுத்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது.   குறிப்பாக அவுரங்காபாத், லாதுர், அகோலாம் அமராவதி, சோலாப்பூர் ஜல்கான், போபால் மற்றும் ஜபல்புர் போன்ற 8 பகுதிகளில் கடும் வறட்சி உள்ளது.   இந்த பகுதி விவசாயிகள் அரசு வங்கியான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா என அழைக்கப்படும் மகாராஷ்டிரா வங்கியின் இருந்து க்டன் உதவி பெற திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் மகாராஷ்டிரா வங்கி இந்த பகுதி விவசாயிகளுக்கு விவசாயக் கடன் அளிக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்து வங்கியின் தலைமை நிர்வாகம் ஒரு சுற்றரிக்கை அனுப்பி உள்ளது.  அந்த சுற்றரிக்கை மேலே குறிப்பிட்டுள்ள எட்டு பகுதிகளில் உள்ள அனைத்து மகாராஷ்டிரா வங்கி கிளைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

அந்த சுற்றரிக்கையில், “வறட்சி காரணமாக விவசாயிகள் விவசாயக் கடனாக ரூ.1300 கோடி க்கு விண்ணப்பித்துள்ளனர்.   ஏற்கனவே இந்த பகுதி வங்கிகளில் உள்ள வாராக் கடன்கள் 18.36% க்கு மேல் உள்ளன.  வங்கியின் சட்ட விதிகளின் படி வாராக்கடன்கள் 15% ஐ தாண்டினால் அந்த வங்கிகள் மேற்கொண்டு கடன் அளிக்கக் கூடாது.   அதனால் புதிய விவசாயக்கடன் அளிக்கக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எட்டு பகுதிகளில் அவுரங்காபாத் பகுதியில் வாராக்கடன்கள் 25% உள்ளன  அடுத்ததாக போபால்  (21.4%), சோலாப்பூர் (19.1%), மற்றும் அகோலா (16.5%).என உள்ளன.

வங்கிச் சட்டத்தின்படி விவசாயக் கடன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.