கொச்சி:

வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட வங்கியே பொறுப்பு என்று கேரள உயர்நீதி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறி உள்ளது.

கேரளாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில்  கணக்கு வைத்திருந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2லட்சத்து 40ஆயிரம் திடீரென காணாமல் போனது.  இந்த பணத்தை சம்பந்தப்பட்ட நபர் எடுக்காத நிலையில், அவருக்கு தெரியாமலேயே பணம் எடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டபோது, சரியான பதில் கிடைக்காத நிலையில், தனது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போனதற்கு வங்கிதான் பொறுப்பு என்றும், எனது பணத்தை வங்கி திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த கீழ்நீதி மன்றம், பணத்தை வங்கி, சம்பந்தப்பட்ட நபருக்கு கொடுக்க உத்தரவிட்டது.

ஆனால், இதை ஏற்க மறுத்த வங்கி நிர்வாகம், கேரள உயர்நீதி மன்றத்தில்மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், வாடிக்கையாளருக்கு சேவை செய்யவே வங்கிகள் உள்ளன.  வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாப்பது வங்கியின் கடமை. ஒருவரது வங்கி பணம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு இழப்பு ஏற்பட்டால் அதற்கு வங்கியே பொறுப்பு. சம்பந்தப்பட்ட நபருக்கு வங்கிதான பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி, வங்கி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.