டில்லி

கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே ஒருவராகவே 10 விக்கட்டுகளை 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் வீழ்த்தி உள்ளார்.

உலகப் புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களில் அனில் கும்ப்ளேவும் ஒருவர் ஆவார். பல சாதனைகளை நிகழ்த்திய கும்ப்ளேவுக்கு ஏராளமான ரசிகர்கள் இன்றும் அவரை நிலைவில் வைத்துள்ளனர். அந்த ரசிகர்களுக்காக அவருடைய சாதனைகளில் முக்கியமானவைகளை காண்போம்.

உலகின் மிகச் சிறந்த பவுலர்களில் ஒருவரான அனில் கும்ப்ளே தனது பாட்டிங்கிலும் அவ்வப்போது சாதனை நிகழ்த்தி உள்ளார். அவருடைய முதல் சதத்தை லண்டனில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அடித்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த இந்த போட்டியில் அவர் 110 ரன்களை 193 பந்துகளில் எடுத்தார்.

ஒருமுறை தாடை உடைந்த நிலையிலும் அனில் கும்ப்ளே விளையாடி உள்ளதும் நினைவு கொள்ளக்கூடியதே ஆகும். கடந்த 2002 ஆம் ஆண்டு ஆண்டிகுவாவில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது மெர்வின் டில்லானின் ஹெல்மெட் வைசர் கழன்று கும்ப்ளேவின் தாடையை தாக்கி அடிபட்டு இரத்தம் கொட்டியது. ஆயினும் அவர் அடுத்த நாள் வந்து மீதமுள்ள 14 ஓவர்களில் பந்து வீசிவிட்டு அறுவை சிகிச்சைக்கு சென்றார்.

மிக முக்கியமான நிகழ்வு கடந்த 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி டில்லியில் நடைபெற்றது. இன்றைக்கு சுமார் 20 ஆண்டுகள் முன்பு பாகிஸ்தானுடனான பந்தயம் டில்லி ஃபிரோஸ் ஷா விளையாட்டரங்கில் நடந்தது. அப்போது 420 ரன்கள் வெற்றுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் பாகிஸ்தானின் 10 விக்கட்டுகளையும் கும்ப்ளே ஒருவரே வீழ்த்தினார். அதனால் பாகிஸ்தான் 212 ரன்களில் சுருண்டது.

கிரிக்கெட் வரலாற்றில் அனில் கும்ப்ளேவின் சாதனை இரண்டாவது ஆகும். இதற்கு முன்பு ஜிம் லேக்கர் முதல் முறையாக ஒருவராகவே 10 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார்.