புதுடெல்லி :
“டார்க் வெப்” என்றழைக்கப்படும் இணைய கள்ளச்சந்தையில் பிரதமர் மோடியின் வலைதள பக்கம் வாயிலாக பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் செலுத்தியவர்கள் விவரம் கசிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேரடி பொருட்கள் விற்பனையில் கள்ளச்சந்தை இருப்பதுபோல் இணைய பயன்பாட்டில் உள்ள கள்ளச்சந்தை ‘டார்க் வெப்’ என்றழைக்கப்படுகிறது.
சைபெல் எனும் இணைய பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் வலைதளத்தில் இருந்து இந்த தரவுகள் திருடப்பட்டதாக தெரிவித்துள்ளது.
5,74,000 பயனாளர்களின் சுய விவரங்கள் அடங்கிய தனிப்பட்ட தரவுகள் இருப்பதாகவும், அதில் சுமார் 2,90,000 பேர் பிரதமரின் நிவாரண நிதிக்கு பணமளித்திருக்கும் விவரம் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரை சமூக வலைதளத்தில் பின்தொடரக்கூடிய லட்சக்கணக்கானோரின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் உள்ளிட்ட சுயவிவரங்கள் அடங்கிய தரவுகள் களவு போயிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், அவர்களின் வங்கி பரிவர்த்தனை விவரங்களும் திருடப்பட்டிருப்பதால் பல முக்கிய புள்ளிகள் கதிகலங்கிப் போயுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் இந்நிறுவனம், பிரதமரின் ட்விட்டர் கணக்கை முடக்கியவர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது நினைவுகூறத்தக்கது.