டாக்கா

ங்க தேசத்தில் மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 11 ஆம் தேதி வங்க தேசத்தில் பல இடங்களில் துர்கா பூஜை  தொடங்கியது..  இதையொட்டி தலைநகர் டாக்காவில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள குமிலா நகரில் கடந்த புதன்கிழமை பூஜை நடந்தது.  அந்த நிகழ்வில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது.

இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்லாமியர்கள் அங்குள்ள சிலைகளை சேதப்படுத்தினர்.  மேலும் இதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் கடும் வன்முறை வெடித்துப் பல இந்துக் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன.   மேலும் ராங்பூர் மாவட்டத்தில் ஒரு இளைஞர் முகநூலில் இஸ்லாமியர்கள் குறித்து தவறாக வெளியான தகவலால் அங்கும் வன்முறை வெடித்தது.

அந்த பகுதியில் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் சுமார் 20 வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர்.  மேலும் 66 வீடுகள் சூறையாடப்பட்டுள்ளது.   நாட்டின் பல இடங்களில் இந்துக்கள் மீது வன்முறை தாக்குதல் தொடர்ந்து வந்ததால் நாடே பதறிப் போனது.  இது குறித்து அந்நாட்டு அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரஹ்டம்ர் ஷேக் ஹசீனா, நாட்டில் மதத்தை பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் அசாதுசமான் கானுக்கு உத்தரவு இட்டுள்ளார்.  பொதுமக்கள் உண்மை அறியாமல் சமூக ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.