துபாய்: பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது சென்னை அணி. இதன்மூலம், அந்த அணியின் கதை இத்தொடரில் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
பெங்களூரு அணி நிர்ணயித்த 170 ரன்கள் என்ற அடையக்கூடிய இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் டூ பிளசிஸ் ஆகிய இருவரும் ஏமாற்றினர்.
காயத்திலிருந்து மீண்டு வந்து பெரிதாக சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அம்பாதி ராயுடு 40 பந்துகளில் 42 ரன்களை மட்டுமே அடித்தார்.
நாராயண் ஜெகதீசன் 28 பந்துகளில் 33 ரன்களை அடிக்க, ஏதேனும் உருப்படியாக செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த கேப்டன் தோனி, 6 பந்துகளில் 10 ரன்களை மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். பின்னால் வந்த மற்ற அனைவரும் சிங்கிள் டிஜிட் ரன்கள்தான்.
இதில் ஒரு கொடுமை என்னவென்றால், சென்னை அணி பேட்டிங்கில், தோனி மட்டும்தான் பெயருக்கு ஒரேயொரு சிக்ஸர் அடித்தார். வேறு எந்த சென்னை பேட்ஸ்மெனும் சிக்ஸர் அடிக்கவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் சிறிய போராட்ட குணம் கூட இல்லாமல் சென்னை அணி தோற்று வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.