புதுச்சேரி.
புதுச்சேரியில் கவர்னருக்கு எதிராக இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக பதற்றமும், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பா.ஜ.க. நிர்வாகிகளான சாமிநாதன், சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசு நியமித்தது. அவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி ரகசியமாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி அரசை கலந்தாலோசிக்காமல் கவர்னர் தன்னிச்சையாக முடிவெடுத்ததை கண்டித்தும், சபாநயாகர் இருக்கும்போது, கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதை கண்டித்தும், கவர்னர் புதுச்சேரியைவிட்டு வெளியேற கோரியும் இன்று காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் இன்று பந்த் நடத்தி வருகின்றன.
அதைத்தொடர்ந்து, புதுச்சேரி கவர்னர் அலுவலகத்தை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆளுநர் மாளிகைக்குள் முன்னேறிச் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதி பதற்றமாக காணப்படுகிறது.
அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.