டெல்லி: தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய விசாரணையின்போது, கட்சி செயல்பாடுகளில் தொய்வு இல்லாமல் இருக்க இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வேண்டும் என கோரப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்று, இடைக்கால நிவாரணம் குறித்து ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்தே, தற்போது எடப்பாடி தரப்பில் புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இரண்டு முறைக்கு மேல் ஒபிஎஸ் தரப்பில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு, தாமதப்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து மீண்டும் 6ந்தேதி முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 6ந்தேதி நடைபெற்ற விசாரயின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், கட்சி செயல்பாடுகளில் தொய்வு இல்லாமல் இருக்க இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று, இடைக்கால நிவாரணம் குறித்து ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்படி, உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அந்த சமயத்தில் கட்சி பணிகளில் இடையூறு விளைவிக்க கூடாது என்றும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் வந்தால், அச்சமயத்தில் அ.தி.மு.க கட்சி மற்றும் கட்சியின் இரட்டை சின்னம், உள்ளிடவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உள்ளார்.
மேலும், பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அதனை காரணம் காட்டி ஏற்கனவே கட்சி விதிகளில் கொண்டு வந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். இது கட்சி பணிகளில் தொய்வு ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் இடைக்கால மனுவில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் வரும் 12-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறத.