சென்னை: ‘தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யவும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை செல்லும்’ என உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இநத் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் உள்ளது. இதில், கதிரியக்க தன்மை கொண்ட கனிமங்கள், அதிக விலை மதிப்புடைய தாது உப்புகள் உள்ளன. இதை அறிந்த சில நிறுவனங்கள், தாது மணலை சட்ட விரோதமாக எடுத்து, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து உள்ளன. இதுதொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு பிரச்சினை ஏற்பட்ட பிறகே, இந்த விஷயத்தில் நீதித்துறையின் அறிவுறுத்திலின் பேரில் காவல்துறை, மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியது. இதைத்தொடர்ந்து குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இருந்து வந்தது.
இதற்கிடையில், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் திடீரென நெல்லை மாவட்டத்தில் 6 கனிமவள நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக தாதுமணல் அள்ளியதாக நோட்டீஸ் அனுப்பியதுடன், அதற்கான உரிமைத்தொகை செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதன்படி, சட்ட விரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்த கார்னெட், இல்மனைட், வி.வி. மினரல்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி உரிமைத் தொகை செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த திடீர் அறிவிப்பு விமர்சனங்களை ஏற்படுத்தியது. அபராதம் பெற்றுக்கொண்டு அவர்கள்மீதான வழக்குகளை நீர்த்து போக அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்தது.
இந்த நிலையில், தாதுமணல் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யவும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டதுடன், சிபிஐ, சிறப்பு அதிகாரிகளை நியமித்து வழக்கை கண்காணிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மேலும், தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யவும் விதித்த தடை செல்லும் என்றும், தாதுமணல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என அறிவுறுத்தியதுடன், வழக்கு தொடர்பான ஆவணங்களை 4 வாரங்களுக்குள் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
சட்ட விரோத, தாது மணலை கைப்பற்றி, குடோன்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்றும், சில தவறுகள் கூட சமுதாயத்தை அரித்து விடும். அதை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. இந்த முறைகேடு தொடர்பாக, ரூ.5,832 கோடியை தனியார் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.