அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 4 வியாபாரிகளுக்கு தடை

Must read

சென்னை:
த்தியாவசியப் பொருட்களை குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விநியோகம் செய்யும் வியாபாரிகளில் அதிக விலைக்கு விற்பனை மேற்கொண்ட 4 வியாபாரிகளுக்கு வியாபாரம் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக, தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 24.05.2021 முதல் 31.05.2021 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக 07.06.2021 அன்று காலை 06.00 மணி வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் முட்டை, ரொட்டி மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவை, வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்கே நேரில் சென்று விநியோகிக்க பெருநகர சென்னை மாநகராட்சியால் விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவர்களின் வாகனப் போக்குவரத்திற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதுவரை மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய 4,122 சில்லறை வணிகர்களுக்கும், 655 சூப்பர் மார்க்கெட் அங்காடிகளுக்கும் மற்றும் 457 மொத்த வியாபார வணிகர்களுக்கும் என, மொத்தம் 5,234 வணிகர்களுக்குப் பதாகைகள், வில்லைகள் மற்றும் வாகன அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

விற்பனையாளர்கள் அனைத்துப் பகுதிகளிலும் விற்பனை மேற்கொள்ளவும், வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகளில் தினசரி விற்பனை செய்யும்போது ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து விற்பனை மேற்கொள்ளவும், பொருட்களின் விலைப் பட்டியலை வாகனத்தில் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் ஒட்டிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், உத்தேச சில்லறை விற்பனை விலையைவிட அதிக அளவில் விற்பனை செய்ய வேண்டாம் எனவும், அவ்வாறு விற்பனை செய்யும் பட்சத்தில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட விற்பனை அனுமதி ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதியை பறிமுதல் செய்வதுடன் வியாபாரம் மேற்கொள்வது தடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியால் 01.06.2021 அன்று மாதவரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், உத்தேச சில்லறை விற்பனை விலையைவிட அதிக விலைக்கு விற்பனை மேற்கொண்ட 4 வியாபாரிகளிடமிருந்து வாகன அனுமதி பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் தொடர்ந்து வியாபாரம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் காய்கனிகள் விலைப் பட்டியல் மற்றும் இதர புகார்கள் சம்பந்தமாக பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடத்துக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 94999 32899 என்ற கைப்பேசி எண் மற்றும் 5 இணைப்புகளுடன் கூடிய 044-4568 0200 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இதுவரை இந்தக் கட்டுப்பாட்டு அறை எண்களில் 1139 புகார்கள் பெறப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசியப் பொருட்களைப் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கிடைக்கவும், நியாயமான விலையில் விநியோகம் செய்வதை உறுதி செய்யவும் வியாபாரிகள் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

More articles

Latest article