நெல்லை: மக்கள் புரிதலுடன் வாக்களிப்பது வாக்குச்சீட்டு முறையில்தான் என ஊரக உள்ளாட்சி தேர்தலில்  ஓட்டுபோட்ட சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த  9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று 2வது கட்ட வாக்குப்பதிவு  35 ஊராட்சி ஒன்றியங்களுக்கான 12,376 இடங்களில் தொடங்கி 6,652 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதன்படி,  திருநெல்வேலி மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் 2ம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது. களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள 783 பதவிகளுக்கு 2,516 பேர் போட்டியிடுகின்றனர். இதில் சபாநாயகர் அப்பாவுவின் பகுதியும் உள்ளடங்கியுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் உள்ள பள்ளியில், சபாநாயகர் அப்பாவு தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “பத்தாண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. நான் எனது வாக்கை செலுத்தி உள்ளனர். வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்கை செலுத்த வேண்டும். இன்றைய வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு முறை யில் நடைபெற்று வருகிறது. மக்கள் புரிதலுடன் வாக்களித்து வருகின்றனர். இது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார்.