அல்வார்,

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் மற்றொரு சாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் அரியானாவில் உள்ள குர்மித் ராம் ரஹிம் என்ற சாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பலாஹரி மஹராஜ் என்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சாமியாரான மஹராஜின் முழுப்பெயர், சுய-பிரஸ்தாப சாமியார் கவுஷலேந்திர பிரபண்ணாச்சார்ய ஃபலாஹரி மஹராஜ். இவர்மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு கூறியதைத்தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இளம்பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக, அந்த பெண் கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவரிடம் ஆசி பெற சத்திஸ்கர் பிலாஸ்பூரிலிருந்து ஆஸ்ரமத்திற்கு வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறினார். கடந்த மாதம் ஆகஸ்ட் 7-ம் தேதி ரக்‌ஷாபந்தன் நாளில் தன்னை சாமியார் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.

சம்பவத்தன்று  இவர் ஆசிரமம் சென்ற போது அன்று சந்திரகிரகணத்தை முன்னிட்டு ஆசிரமத்தில் தங்குமாறு சாமியார் அவரை வற்புறுத்தி உள்ளார். பின்னர் தன்னை அவரது அறைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும், தொடக்கத்தில் தான் புகார் கூற தயங்கியதாகவும், ஆனால் சாமியார் ராம் ரஹிம் கைதுக்குப் பிறகு புகார் தெரிவிக்க தனக்கு தைரியம் ஏற்பட்டதாக அந்த பெண் கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து கடந்த 11-ம் தேதி அந்த பெண்ணின் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரை  பதிவு செய்து கொண்ட அல்வார் போலீஸார், பாதிக்கப்பட்ட பெண்ணை ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று, சம்பவம் நடந்த அறையைக் காட்டுமாறு கூறியதாகவும், பின்னர்  அந்த பெண்ணை ரெயில் நிலையம் சென்று வழியனுப்பிய சாமியாரின் சீடரையும் அடையாளம் காண சொன்னதாக வும், அதையடுத்து சாமியாரின் படுக்கை அறைக்கு சீல் வைக்கப்பட்டதாகவும்  கூறப்படுகிறது.

இது தொடர்பாக சாமியாரிடம் விசாரண செய்ய முயன்றதும், அவர் உடல் நலமில்லை என்று கூறி  உடனடியாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்துவிட்டார்.

ஆனால், போலீசார் மருத்துவமனை சென்று விசாரணை செய்து சாமியாரை கைது செய்து, நீதிபதியின் வீட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக சாமியாரின் பக்தர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.