டில்லி:

‘‘கொசுக்களை கடவுள் மட்டுமே ஒழிக்க முடியும். இதனை செய்ய நாங்கள் கடவுள் இல்லை’’ என உ ச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கொசுக்களால் ஏற்படும் நோய்களால் உலகம் முழுவதும் 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தானேஷ் லஷ்தன் என்பவர், ‘‘நாடு முழுவதும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மத்திய அரசு க்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் கொசுவை அகற்ற வேண்டும் என எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்கும் என்று நாங்கள் கருதவில்லை.

ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கொசு, ஈ.,யை விரட்டுங்கள் என்று கூற முடியாது. நீங்கள் கேட்பதை கடவுளால் தான் செய்ய முடியும். கடவுள் மட்டும் செய்ய முடிந்ததை நாங்கள் செய்ய வேண்டும் என கேட்காதீர்கள். நாங்கள் கடவுள் இல்லை’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

முன்னதாக டில்லி நகரில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் தவறிவிட்டன என்று டில்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதை கட்டுப்படுத்த உயர்மட்ட கூட்டம் நடத்தப்பட்டு விவாதிக்கப்படும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ‘‘கூட்டம் நடக்கும் வரை கொசுக்கள் காத்திருக்காது’’ என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சம்பவத்தில் டெங்கு காய்ச்சல் நோய் பரவுவதை கட்டுப்படுத்தாமல் இருப்பதும் ஒரு வகையில் கொடூர கொலை என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.