சென்னை: தமிழ்நாட்டில் நாளை பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்:
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்!அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உயரிய கோட்பாடுகளோடு, நபிகள் நாயகம் அளித்த போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் இந்தப் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.
நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும் கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, தியாகப் பெருநாளைப் பாதுகாப்புடன் கொண்டாடிட வேண்டும் எனக் கேட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
பக்ரீத் திருநாளையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், “தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த “பக்ரீத்” திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத் தான். நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்றத் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலை நிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் பக்ரீத் திருநாளை, கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மகிழ்ச்சியோடு கொண்டாடுமாறு கேட்டுக் கொள்வதுடன், இந்த இனிய திருநாளில் எல்லோரிடத்திலும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனித குல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சசிகலா
பக்ரீத் பெருநாள் நாளையொட்டி சசிகலா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளை கொண்டாடும் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை இவ்வுலகிற்கு உணர்த்தும் நாளாக கொண்டாடப்படும் இந்நன்னாளில், துரோகங்கள் அழிந்து, சகோதரத்துவமும், ஈகை குணமும் தழைத்தோங்கட்டும், தியாகசிந்தனைகள் மேலோங்கட்டும்.
இத்திருநாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் காலை சிறப்பு தொழுகையை நிறைவேற்றி, இறைவனின் அருளைப் பெற்று அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, ஏழை எளியோருக்கு உணவளித்து, உற்றார் உறவினர்களுடன் இந்த பக்ரீத் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழட்டும். இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கிய நம் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும், இஸ்லாமியர்கள் பயன் பெரும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அளித்து அவர்கள் பெரிதும் பயனடைந்தனர் என்பதை இந்நன்னாளில் பெருமிதத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்த தியாகத் திருநாளில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் பெருகட்டும். வேற்றுமை நீங்கி, ஒற்றுமை ஓங்கட்டும். அன்புள்ள இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜகிருத்தீன் அஹமது
அதேபோல் இந்திய தேசிய லீக் மாநில பொதுச்செயலாளர் ஜகிருத்தீன் அஹமது வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், நிம்மதியும் நிரந்தரமாக மனித இனத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை, உலக மக்கள் ஒன்றுபட்டு பிரார்த்திப்போம். ஹஜ் கடமையை நிறைவேற்றி தியாகத்தின் மகிமையை உணர்த்தும்வண்ணம், தூய்மையான உள்ளத்துடன் தியாகத்திருநாளை கடைபிடிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இந்திய தேசிய லீக் சார்பில் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் இன்று நாடெங்கும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஈத்-உல்-அஸா என்னும் நோன்பைக் குறிக்கும் இந்தப் பக்ரீத் பெருநாள், `கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது’ என்பதை உணர்த்தும் நன்னாளாகும்.’தினசரி வாழ்வில் கடைப் பிடிக்கக்கூடிய எளிய, உயர்ந்த வழிமுறைகள் பலவற்றைக் கற்பித்த நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் தங்களது வாழ்வியல் பாதையை வகுத்து கொள்ள வேண்டும். மற்ற சமுதாயத்தினர் நம்மை பின்பற்றி, தங்களது வாழ்வியல் பாதை அமைத்து கொள்ளும் அளவிற்கு நபிகள் வழியில் நான் இனி வரும் நாட்களிலாவது பயணிக்க வேண்டும்.
தற்போது நாட்டில் சம உரிமை, சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் அனைவரும் சமமாக பெறுவதே மக்களாட்சியின் தத்துவமாகும். அந்த முயற்சிகள் வெற்றி பெற மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். சில மதவாத சக்திகளலால் நாட்டில் வெறுப்பு அரசியல் மூலம் இஸ்லாமிய – இந்து சகோதரர்களிடையே மோதலை உருவாக்கி அதன் மூலம் குளிர் காய நினைக்கிறக்கிறார்கள். அவர்களின் எண்ணத்தை முறியடித்து, நாட்டில் அமைதியும், வளமும் பெருக பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம் என இந்திய தேசிய லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.