லக்கிம்பூர் கேரி
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி பகுதியில் பாஜக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக இந்த பகுதிக்கு வந்த அம்மாநில துணை முதல்வர் மவுரியா மற்றும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் கூடி இருந்தனர்.
அப்போது அணிவகுப்பில் வந்த ஒரு கார் விவசாயிகள் இடையே புகுந்ததில் 4 பேர் கார் ஏறி உயிர் இழந்தனர். இதையொட்டி எழுந்த வன்முறையில் மேலும் ஐவர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது ஏறிய காரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்பட்டது. விவசாயிகளின் கடும் போராட்டத்துக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஆஷிஷ் மிஸ்ரா சார்பில் லக்கிம்பூர் கேரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவருடைய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் அவருடைய நண்பர் ஆஷிஷ் பாண்டேவின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.