’’பாகுபலி’’ இயக்குநர்  ராஜமவுலிக்கு கொரோனா..

’பாகுபலி’ , பாகுபலி- 2 ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி, தெலுங்கு சினிமா உலகின் நம்பர் -1 இயக்குநராகக் கருதப்படுகிறார்.

தற்போது அவர் ‘’ரவுத்ரம், ரணம்,ருத்திரம்’’ ( R R R ) என்ற சரித்திர படத்தை இயக்கி வருகிறார்.

ஜுனியர் என்.டி.ஆர்., ராம்சரண், அலியா பட், அஜய்தேவ் கான் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்படும்  மார்ச் மாதம் வரை நடந்து வந்தது.

ஊரடங்கு காரணமாக இப்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  ராஜமவுலிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டில் ராஜமவுலியும், அவரது குடும்பத்தாரும் தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளனர்.

இசை அமைப்பாளர் எஸ்.தமன், நடிகர் ஜெகபதி பாபு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், ராஜமவுலி, விரைவில் குணம் அடையுமாறு தங்கள் டிவிட்டர் பக்கத்தில்  வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

‘’தினமும் முட்டை  சாப்பிடுங்கள், கவலைப்பட வேண்டாம்’’ எனவும் .சிலர் ராஜமவுலிக்கு ’’அட்வைஸ்’’ செய்துள்ளனர்.

தனக்கு லேசாகக் காய்ச்சல் இருந்ததால், தானும் குடும்பத்தாரும் பரிசோதனை செய்ததாகவும், கொரோனா என ரிசல்ட் வந்ததால், அனைவரும் தனிமையில் உள்ளதாகவும் ராஜமவுலி ட்விட் பதிவிட்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்துப் பதிவிட்ட இன்னொரு ட்விட்டில் ’’ இப்போது எங்களுக்கு நோய் அறிகுறி இல்லை. எனினும் டாக்டர்கள் அறிவுரையை ஏற்று ஓய்வில் உள்ளோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

-.பா.பாரதி