ஹைதராபாத்
உலகெங்கும் 80000 க்கும் மேற்பட்டோரை பலிவாங்கி வரும் COVID-19 க்கு தற்போது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் இத்தொற்றுக்கு 150 ற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
பலரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மீட்பு பணிக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்த பாட்மிண்டன் வீரர் சாய் பிரணீத் 4 லட்சம் நிதி வழங்கியுள்ளார். இதில் 3 லட்சம் பிரதமர் நிவாரண நிதியாகவும், 1 லட்சம் தெலங்கானா நிதியாகவும் பிரித்தளிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரணீத், “கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எனது இந்த சிறு பங்களிப்பும் இடம்பெற வேண்டும் என்பதே விருப்பம்” என்றார்.
ஏற்கனவே பாட்மிண்டன் பயிற்சியாளர் பியுலே கோபிசந்த், வீரர்களான பி.வி.சிந்து, பருப்பள்ளி கஷ்யப் உள்ளிட்டோரும் கொரோனா நிதி அளித்துள்ளனர்.
சாய் பிரணீத் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.