நெட்டிசன்:

அருண் நாகலிங்கம். புதுச்சேரி….

கிருமிகள் நிறைந்த அசுத்தமான தண்ணீரை அதிக செலவின்றி, சிக்கலின்றி நல்ல நீராக மாற்ற, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஒரு எளிய வழியை கண்டுபிடித்துள்ளனர்.

கான்பெராவிலுள்ள நியூசவுத் வேல்ஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், கரியமில வாயுவை சூடாக்குவதன் மூலம் நீரை சுத்திகரிக்க முடியும் என காட்டியுள்ளனர். அசுத்தமான தண்ணீருள்ள பாத்திரத்திற்குள், 100 முதல், 205 டிகிரி சென்டிகிரேடு வரை சூடேற்றப்பட்ட கரியமில வாயுவை செலுத்தினால், கீழிருந்து வாயு மேலே கொப்பளித்து வரும் வழியில், பெரும்பாலான பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கொன்றுவிடுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நீரை சுத்திகரிப்பதற்கு, ஏற்கனவே உள்ள வேதியல், இயற்பியல் முறைகளைவிட கொதிக்கும் கரியமில வாயு முறை சிக்கனமானது.

திரவத்தைவிட வாயுவை சூடேற்ற அதிக எரிபொருள் செலவாகாது. தவிர, கரியமில வாயு பல வேதியல் தொழிற்சாலைகளின் பக்கவிளைவுப் பொருளாகக் கிடைக்கிறது.

பன்றி வளர்க்கும் பண்ணையின் அசுத்த நீரை, விஞ்ஞானிகள் இந்த புதிய முறைமூலம் சுத்திகரித்த போது, கிடைத்த நீர் மிகவும் சுத்தமாக இருந்ததாக, ‘கிளீன் வாட்டர்’ ஆய்விதழ் தெரிவித்துள்ளது.