புனே: மகாராஷ்டிர மாநில பிரபல எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், இலக்கிய துறையினர் என பல்வேறு தரப்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து எழுதி புகழ் பெற்றவர் எழுத்தாளர் பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே என்கிற பாபாசாகேப் புரந்தரே. இவருக்கு மத்தியஅரசு நாட்டின் மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது வழங்கி கடந்த 2019ம் ஆண்டு கவுரவித்தது. வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சலால் அவதியுள்ளார். அவருக்கு சோதனை செய்ததில், அவர் நிமோனியா காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, புனேவில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாக வந்த நிலையில், ன்று அதிகாலை 5 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், “நான் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனைப்படுகிறேன். ஷிவ்ஷாஹிர் பாபாசாகேப் புரந்தரேவின் மறைவு வரலாறு மற்றும் கலாச்சார உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது. வரும் தலைமுறையினர் சத்ரபதி சிவாஜி மகாராஜுடன் மேலும் இணைந்திருப்பதற்காக அவருக்கு நன்றி. அவரது மற்ற படைப்பு களும் நினைவுக்கூறப்படும். ஷிவ்ஷாஹிர் பாபாசாஹேப் புரந்தரே புத்திசாலியாகவும், இந்திய வரலாற்றில் வளமான அறிவுடனும் இருந்தார். பல ஆண்டுகளாக அவருடன் மிக நெருக்கமாக பழகிய பெருமை எனக்கு கிடைத்தது. சில மாதங்களுக்கு முன், அவரது நூற்றாண்டு விழாவில் உரையாற்றினேன்.
ஷிவ்ஷாஹிர் பாபாசாகேப் புரந்தரே தனது விரிவான பணிகள் மூலம் வாழ்வார். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி. ” என கூறியுள்ளார்.