ஐஐடி மெட்ராஸில் பி.டெக் பட்டப்படிப்பை முடிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு, இனி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பி.எஸ்சி பட்டத்துடன் வெளியேறும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை பெற்ற மாணவர்கள் 2027 ஆம் ஆண்டு முதல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

முந்தைய ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் இந்த வசதியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் பி.எஸ்சி பட்டத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பு, குறைந்தபட்சம் ஒரு முறையாவது பி.டெக் பட்டத்தை முடிக்க முயற்சி செய்திருக்க வேண்டும் என்றும் மொத்தமுள்ள 400 கிரெடிட்களில் 250 கிரெடிட்களைப் பெற்றிருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பி.எஸ்சி பட்டம், மாணவர்கள் எம்பிஏ உள்ளிட்ட உயர்கல்வியில் சேரவும், குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகவும் உதவும். வெளியேறும் மாணவர்கள் பின்னர் ஆன்லைன் பி.எஸ் பட்டப் படிப்புகளிலும் சேரலாம் என்றும் ஐஐடி சென்னை நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாடத்தின் மீது ஆர்வமில்லாமல் சேரும் மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடிக்க சிரமப்படுகிறார்கள். சிலர் தொழில்முனைவோராக மாறிய பிறகு தங்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிடுகிறார்கள். “இதுபோன்ற மாணவர்களுக்கு ஒரு பட்டத்தைப் பெற இந்த வாய்ப்பு உதவும்,” என்று கூறப்படுகிறது.

பட்டப்படிப்புத் திட்டங்களில் பலமுறை சேர்வதற்கும் வெளியேறுவதற்கும் வழிவகை செய்வது தேசிய கல்விக் கொள்கையின் (NEP) முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

மாணவர்களின் கல்வி அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், ஒரு செமஸ்டருக்குத் தேவையான குறைந்தபட்ச கிரெடிட்களின் எண்ணிக்கையை 10% குறைப்பது உட்பட பல சீர்திருத்தங்களையும் ஐஐடி மெட்ராஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]