லாஸ் ஏஞ்சலஸ்

பிரசித்தி பெற்ற திரைப்பட விருதான கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை தமிழ்நாட்டு வம்சாவளியினரான அஜிஸ் அன்சாரி பெற்றுள்ளார்.

ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக பெருமை வாய்ந்த விருது கோல்டன் குளோப் விருது ஆகும்.   இந்த விருது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களுக்கு வழங்கப் படுகிறது.   பிரபல இந்திய இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற படத்துக்காக இந்த விருது கிடைத்தது.     அதற்குப் பின் “தி மாஸ்டர் ஆஃப் நன்” என்னும் தொலைக்காட்சி சீரியலில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த அஜிஸ் அன்சாரிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.    இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிபிடத்தக்கது.

அமெரிக்காவில் கொலம்பியாவில் பிறந்த அஜீஸ் அன்சாரியின் பெற்றோர் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.  இவரது தாய் ஃபாத்திமா ஒரு மருத்துவ நிறுவனத்தில் பணிபுரிகிறார்.  தந்தை சௌகத் ஒரு தாய் சேய் நல நிபுணர்.   அன்சாரி  வர்த்தகத் துறையில் பட்டம் பெற்றவர்.

நடிப்பின் மீதிருந்த ஆர்வம் காரணமாக இவர் நடிப்புத் துறையில் இணைந்தார்.   நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.    ஆயினும் போதுமான வாய்ப்புக்கள் கிடைக்காததால் அவர் தனது சொந்த தயாரிப்புகளில் நடித்து புகழ் பெற்றார்.     அதன் பிறகு அவர் நடிப்பு பலராலும் பேசப்பட்டு வந்தது.  தற்போது உயரிய விருதான கோல்டன் குளோப்பின் சிறந்த நடிகர் விருது அஜீஸ் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அன்சாரிக்கு இந்த விருது தொலைக்காட்சி சீரியல் நகைச்சுவை பிரிவில் சிறந்த நடிகருக்காக வழங்கப் பட்டுள்ளது.   இந்த விருதை பெறும் முதல் ஆசியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.     மேலும் தமிழ் நாட்டை சேர்ந்த இவர் தற்போது ஹாலிவுட்டை கலக்கி வருகிறார்.