டில்லி

விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி தலைவர் பதவியில் இருந்து விலகி அவர் மகன் ரிஷத் பிரேம்ஜி பொறுப்பு ஏற்க உள்ளார்.

                                            அசிம் பிரேம்ஜி

உலகப்புகழ் பெற்ற நிறுவனமான விப்ரோ நிறுவனத்தை முகமது பிரேம்ஜி கடந்த 1945 ஆம் வருடம் தொடங்கினார்.    அவர் மறைவுக்கு பிறகு முகமது பிரேம்ஜியின் மகன் அசிம் பிரேம்ஜி கடந்த 1966 ஆம் வருடம் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.  அப்போது அவருக்கு வயது 21 ஆகும்.  முதலில் வெஸ்டர்ன் இந்தியா வெஜிடேபில் பிராடக்ட்ஸ் லிமிடெட் என்னும் பெயரில் இந்நிறுவனம் இயங்கி வந்தது.

அதன் பிறகு அந்நிறுவனம் 70 களிலும் 80 களிலும் தகவல் தொழில் நுட்பத்தில் காலடி பதித்து வளரத் தொடங்கி முன்னனி நிறுவனமாக விளங்கியது.    கடந்த 1977 ஆம் வருடம் ஜூன் மாதம் 7 ஆம் தேதி முதல் நிறுவனத்தின் பெயரை சுருக்கி விப்ரோ லிமிடட் என மாற்றப்பட்டது.   அந்த நிறுவனத்தின் தலைவராக அசிம் பிரேம்ஜி நிர்வாக இயக்குனர் படஹ்வியை வகித்து வருகிறார்.

 

ரிஷத் பிரேம்ஜி

அசிம் பிரேம்ஜி தற்போது பொறுப்புகளில் இருந்து விலகி ஓய்வெடுக்க உள்ளார்.  இவர் தனது பெரும்பாலான சொத்துக்களை  உலக மக்கள் நலனுக்காக நன்கொடை அளித்தவர் ஆவார்.  வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதியுடன் தனது பதவிக்காலத்தை முடித்துக் கொள்ளப் போவதாக நிர்வாக குழுவிடம் அசிம் அறிவித்துள்ளார்.

 

அசிம் பிரேம்ஜியின் மகன் ரிஷத் பிரேம்ஜி தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார் என தெரிய வந்துள்ளது.  இந்த முடிவை நிர்வாகக் குழு விரைவில் அங்கீகரித்த பிறகு இந்த பதவி மாற்றம் நடைபெற உள்ளது.     ஓய்வுக்கு பிறகு தாம் முழுவதுமாக மக்கள் நலனில் கவனம் செலுத்த உள்ளதாக அசிம் அறிவித்துள்ளார்.