தராபாத்

சிறுபான்மையினர் வாக்குகள் வேறு கட்சிக்குப் போய்விடுமோ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பயப்படுவதாக ஏஐஎம்ஐஎம் கட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி, “ஒரு சில இந்துக்களிடம் தீவிரவாத போக்கு உள்ளதைப் போல் சில சிறுபான்மை இன மக்களிடமும் அத்தகைய போக்கு உள்ளது.  சில அரசியல் கட்சிகள் இதற்கெனவே செயல்படுகின்றன.

இது போன்ற கட்சிகள் பாஜகவிடம் இருந்து பணம் வாங்கி சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்கின்றன.   நான் கூறும் கட்சிகள் நமது மேற்கு வங்கத்தில் இல்லை.   ஆனால் ஐதராபாத்தில் உள்ளனர் எனத் தனது உரையில் தெரிவித்தார்.  இது ஐதராபாத் மக்களவை உறுப்பினரும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதின் ஓவைசிக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

அசாதுதீன் ஒவைசி ”மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என் மீதுதான் குற்றம்சாட்டியுள்ளார். அவர் மேற்குவங்கத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு இதன் மூலம் ஒரு தகவலைக் கூறியுள்ளார். அதாவது அம்மாநிலத்தில் எங்கள் கட்சி அசைக்க முடியாத சக்தி என்பதையும் வளர்ந்து வரும் பெரும் அரசியல் கட்சி என்பதையும் அவர் உணர்ந்துள்ளார் என்பதே அது என பதிலளித்துள்ளார்.

அக்கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் சமருல் ஹசன், “எங்கள் கட்சி மேற்கு வங்க மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வருவதால் முதல்வர் மம்தா பானர்ஜி எங்களைப் பார்த்து அஞ்சுகிறார். தங்கலை விட்டு சிறுபான்மை மக்களின் வாக்குகள் சென்று விடுமோ எனப் பயப்படுகிறார்.

அந்த அச்சத்தால் எங்கள் தலைவர் ஒவைசியை அவர் விமர்சிக்கிறார்.  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே நாங்கள் மேற்கு வங்கத்தில் போட்டியிட விரும்பினோம்.  இம்மாநிலத்தில் பாஜக பலம் பெற்று விடக்கூடாது என்பதால் ஒவைசி அதை அனுமதிக்கவில்லை” எனக் கூறி உள்ளார்.