அமித்ஷாவை சந்தித்த அய்யாக்கண்ணு பல்டி: மோடிக்கு எதிராக போட்டியில்லை என அறிவிப்பு

Must read

டில்லி:

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு  பிரதமருக்கு எதிராகப் போட்டியிடவில்லை என அறிவித்து உள்ளர். அய்யாக்கண்ணுவின் திடீர் பல்டி விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு  விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2017-ம்  ஆண்டு முதல்  டில்லி ஜந்தர் மந்திரில் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மோடிக்கு எதிரான அவரது போராட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால், அவரது கோரிக்கைக்கு மத்தியஅரசு செவிசாய்க்கவில்லை. மோடி ஒருமுறை கூட விவசாயிகளை சந்தித்து பேசவில்லை. இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடைபெற இருக்கும்   மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக விவசாயிகள் களமிங்குவார்கள் என்று அறிவித்தார். தான் உள்பட 111 விவசாயிகள் வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக இருப்பபதாகவும் அறிவித்தார். அவர்கள் விரைவில் வாரணாசி செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில், தமிழக அமைச்சர் தங்கமணி  தலைமையில், அய்யாகண்ணு பாஜக தலைவர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது மத்திய மந்திரி பியூஸ் கோயல் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப் படும் என பாஜக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு,  அமித்ஷாவுடனான சந்திப்பு மன நிறைவை தருகிறது. அதன் காரணமாக பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.

அய்யாக்கண்ணுவின் திடீர் பல்டி விவசாயிகள்  மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article