சென்னை: அய்யா வைகுண்டரின் 191வது அவதார  திருநாளை முன்னிட்டு, வடசென்னையில், அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டுடன், அய்யா வழி பக்தர்கள்,  ஊர்வலமாக மணலி புதுநகரில் உள்ள அய்யா கோவில் சென்றடைந்தனர்.


ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு ஐயா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் 191ஆவது அவதார தினம் கொண்டாடப்படுகிறது. ஐயா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி ஐயா வழி மக்கள் பாத யாத்திரையாக பல ஊர்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு வந்து அருள் பெற்றுச் செல்வர்.

அய்யா வைகுண்டரின் 191வது அவதார விழா இன்று தென்மாவட்டங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு இன்று விடமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அய்யாவழி பக்தர்கள் ஏராளமானோர் சென்னையில் வசித்து வருகின்றனர். மேலும் சென்னையின் பல இடங்களிலும் அய்யாவின் தர்மபதி கோவில்களும் உள்ளன.

இந்த நிலையில், அய்யா வைகுண்டரின் 191வது அவதார  திருநாளை முன்னிட்டு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நாராயண நாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில் இருந்து இரட்டை குதிரை பூட்டிய அலங்கரிக்கப்பட்ட வண்டியில், அய்யா அருளிய அகிலத்திரட்டு ஆகமத்தை வைத்து. அதனுடன் திருநாமக்கொடி ஏந்தி ஊர்வலமாக அய்யாவழி பக்தர்கள் மணலிபுதுநகரில் உள்ள அய்யா தர்மபதிக்கு எடுத்துச் சென்றனர்.

இந்த ஊர்வலத்தை சமத்துவ மக்கள் கழக தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் மற்றும் கோயில் தலைவர் துரைப்பழம் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்   திருநாமக்கொடி ஏந்தி பாதயாத்திரையாக மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதிக்கு, சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஊர்வலமாகச் சென்றனர்.

இந்த ஊர்வலம் வடசென்னை வண்ணாரப்பேட்டை பகுதி நல்லப்ப வாத்தியார் தெரு, ராமானுஜர் தெரு, டி.எச்.ரோடு, மணலி புதுநகர் வழியாக அய்யா வைகுண்ட தர்மபதியை சென்றடைந்தது.

ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு செல்லும் வழியில் உபயதாரர்கள் நீர், மோர் வழங்கினர். திருவொற்றியூர் டி.எஸ்.எஸ். நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பில் அதன் தலைவர் ஆர்.பி. மனோகரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு காலை உணவு வழங்கப்பட்டது.

ஊர்வலம் தர்மபதியை அடைந்ததும் பகல் பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலையில் ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு, பணிவிடை, அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் வைகுண்ட ஜோதி ஏற்றி இனிமம் வழங்கப்பட உள்ளது.