சென்னை: ஆயுதபூஜையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊருக்கு செல்ல மக்களின் வசதிக்காக இன்று 1000 சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. இன்று மட்டும் 30ஆயிரம் பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.

பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வார விடுமுறை தினங்களில் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயங்கி வருகிறது. தற்போது ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை வருவதால் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது.  ‘இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை மற்றும் சுற்று பகுதியில் வசிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தொழிலாளர்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வமாக உள்ளனர்.  ஏற்கனவே ரயில்கள், தனியார் பேருந்துகளில் இடங்கள் நிரம்பி உள்ளதால், பயணிகள் அரசு பேருந்துகளை நாடி வருகின்றனர். இதையொட்டி சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

இதன் காரணமாக, சென்னை கோயம்பேடு, மதுரவாயல் பைபாஸ், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து மொத்தம் 2264 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி இன்று  மட்டும் 1000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக இந்த பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது.

இன்று காலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.  சென்னையில் இருந்து மட்டும் 17 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்ய உள்ளனர்.  ஊட்டி  போன்ற சுற்றுலா தலங்கள் மற்றும் திருச்செந்தூர், பழனி போன்ற ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்லவும் அதிகம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதுபோல,  இன்று கோயம்பேட்டில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 1270 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.