டெல்லி: வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெறும்  ஜனவரி 22ஆம் தேதி  நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அறிவித்து  மத்திய அரசு  உத்தரவிட்டு உள்ளது. இதை மத்திய அமைச்சர்,  ஜிதேந்திர சிங் அறிவித்து உள்ளது.

“அயோத்தியில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டா 2024 ஜனவரி 22 அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களும், பணியாளர்களும் பங்கேற்கும் வகையில்,  இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களுக்கு 22 ஜனவரி 2024 அன்று மதியம் 2மணி வரை  அரை நாள் விடுமுறை அளிக்க என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று பணியாளர் மற்றும் பயிற்சி (DoPT) துறை வெளியிட்டுள்ள  ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கான “அதிகமான உணர்வு மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு” பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

“அயோத்தியில் பிரான் பிரதிஷ்டா விழாவை ஒட்டி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அமைப்புகள் மற்றும் மக்கள் குழுக்களால் பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன” என்றும், இந்த சிறப்பு நிகழ்ச்சியின்  “முழு நிகழ்வையும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான விரிவான ஏற்பாடுகளை தூர்தர்ஷன் செய்துள்ளது, இது பல தனியார் தொலைக்காட்சி சேனல்களிலும் நேரடியாகக் காண்பிக்கப்படும். அயோத்தி விழாவை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பொது இடங்களில் பெரிய திரைகளில் நேரடியாக திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றும் கூறப்பட்டுள்ளது.