சென்னை: அயோத்தி ராமர்கோவில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை தமிழக கோவில்களில் நேரடி ஒளிரபப்பு செய்ய திமுக அரசு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பான வழக்கில்,  கோவில்களில் அயோத்தி  நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு  செய்ய 288 விண்ணப்பங்கள் வந்ததாகவும், அதில்  4க்கு மட்டுமே அனுமதி அளித்ததாக காவல்துறை  பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில் வரலாற்று சிறப்பு மிக்க ராமர்கோவில்  1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரான் பிரதிஷ்டை செய்தார்.

அதேசமயம், கும்பாபிஷேகத்தைக் காண பக்தர்கள் யாரும் கோவிலுக்கு நேரில் வரவேண்டாம். பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி நாடு முழுவதும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும்  பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களிலும், வீடுகளிலும் நிகழ்ச்சிகளை கண்டுகளித்து சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுமாறும், வீடுகளில் இராம ஜோதி ஏற்றி வழிபடுமாறும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களில் உள்பட பல மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டும், ராமபிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சிகளடள நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டன.

ஆனால், தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் அயோத்தி கோவில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பு செய்ய தமிழக பா.ஜ.க. தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், கோவில்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யவும், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தவும் தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. செயலாளர் வினோஜ் பி செல்வம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அயோத்தி இராமர் கோவிலில் ஜனவரி 22-ம் தேதி நடைபெற்ற பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சியை தமிழக கோவில்களில் ஒளிபரப்ப தடை விதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக உத்தரவிட்டிருந்ததாகத் தெரிவித்திருந்தார். மேலும், கோவில் நிர்வாகம் சார்பிலோ, பக்தர்கள் பெயரிலோ, அமைப்புகள், கட்சிகள் பெயரிலோ எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது. அதை விளம்பரப்படுத்தக் கூடாது. அன்னதானம் உள்ளிட்ட செயல்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆதாரப்பூர்வமாக தினசரி ஒன்றில் செய்தி வெளியானது.  மேலும் இது தொடர்பான ஆடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஜனவரி 22ந்தேதி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.  விசாரணை யின்போது, தமிழக காவல்துறை டி.ஜி.பி.  தரப்பில் உயர் நீதிமன்றத்தில்  பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  ராமர் கோவில் பிரதிஷ்டை நேரடி ஒளிபரப்பு தொடர்பான  அரசுக்கு எதிரான மனுக்கள் ஆதாரமற்றவை என்றும், பிரான் பிரதிஷ்டை தொடர்பான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்றும், மேற்கண்ட மனு தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசுவதாகவும், தமிழக அரசு இந்துக்களுக்கு எதிரானது அல்ல என்றும் , இந்த மனு  அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அப்போது நீதிமன்றம் கோவில்களில் அரசு அனுமதி பெற்று நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்றும், தனியார் கோவில்கள், மண்டபங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய அரசின் அனுமதி தேவையில்லை என்று உத்தரவிட்டது.

ஆனால், தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் இந்து மக்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வந்தது.  ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டையை மாநிலத்தின் பொது இடங்களில் பெரிய திரைகளில் நேரடியாக ஒளிபரப்புவதைத்  காவல்துறை  மூலம் தடுத்து, அதற்காக வைக்கப்பட்டிருந்த எல்இடி திரைகளை அகற்றி அழிச்சாட்டியம் செய்தது. இது , பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  டி.ஜி.பி. அளித்த பிரமாணப் பத்திரத்தில் முதலில் பொய் சொன்னது அம்பலமாகி உள்ளது.  அந்த பத்திரத்தில்,   அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் 288 விண்ணப்பங்கள் வந்ததாகவும், அவற்றில் 146 மனுக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், 138 மனுக்கள் பரிசீலனைக்காக பெண்டிங் கில் வைக்கப்பட்டிருப்பதாகவும், 4 மனுக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் அயோத்தி நிகழ்ச்சியை தமிழகத்தில் ஒளிபரப்ப தமிழக அரசும், தமிழக காவல்துறையும் அனுமதி மறுத்தது அம்பலமாகி இருக்கிறது.

ராமர்கோவில் கும்பாபிஷேகத்தை கோயில்கள், மண்டபங்களில் நேரலை செய்யலாம்! உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அனுமதிம்

ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் அயோத்தி கோயில் கருவறையில் ‘பால ராமர் சிலை பிரதிஷ்டை’செய்யப்பட்டது! பிரதமர் மோடி உள்பட ஏராளமானோர் பங்கேற்பு – வீடியோ