டில்லி

யோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றத்தின், அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வரும் என பலமுறை எதிர்பார்த்த நிலையில், நீதிபதிகள் விலகல்  மற்றும் விடுமுறை காரணமாக விசாரணைக்கு வருவது தாமதமாகி வந்தது.

இந்த நிலையில் வரும் 26ந்தேதி வழக்கு விசாரணைக்கு வரும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. விசாரணை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் இடம் தொடர்பான வழக்கு பல வருடங்களாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வந்த நிலையில்,மேல்முறையீட்டு மனுக்கள் மீது அரசியல் சாசன அமர்வு இறுதி விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டது.

அயோத்தி நிலம் தொடர்பாக 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அமர்வு ஜனவரி 10ம் தேதி முதல் வழக்கை விசாரிக்கும் என முதலில் அறிவிக்கப் பட்டது. ஆனால், இஸ்லாமிய சமூகத்தினரின் வழக்கறிஞர் ராஜீவ் தவன், அரசியல் சாசன அமர்வில் உள்ள நீதிபதியான யு யு லலித் அப்போதைய முதல்வர் கல்யாண் சிங் சார்பாக வாதாடியதாக  கூறினார்.

இதையடுத்து அரசியல் சாசன அமர்வில் இருந்து  நீதிபதி யு யு லலித் விலகினார்.  இதன் காரணமாக விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், புதிய அமர்வு உருவாக்கப்பட்டது. இந்த அமர்வில்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,  நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த அமர்வு ஜனவரி 29ந்தேதி முதல் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி எஸ் ஏ பாப்தே விடுமுறை காரணமாக விசாரணை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வரும் 26ந்தேதி அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசா ரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]