சென்னை:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை பார்வையிட உச்சநீதி மன்றம் அமைத்துள்ள 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவினர் இன்று அயோத்தி செல்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்ட இடம், ராமர் பிறந்த இடம் என்று இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. இது தொடர்பான சர்ச்சை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அதைத்தொடர்ந்து, சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரித்து ராமர் கோவில், இஸ்லாமிய வக்ஃபு வாரியம், நிர்மோகி அகரா இந்து அமைப்பு ஆகியவை சமமாக பிரித்துக்கொள்ளும்படி கூறியது.
ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத அமைப்புகள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு விசாரணைக்காக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த அமர்வு, சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், மத்தியஸ்தம் மூலம் தீர்வு காணப்படும் என கூறியது. அதையடுத்து கடநத் 8ந்தேதி ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில், ஆன்மீகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மத்தியஸ்தர் குழுவையும் அமைத்து உத்தர விட்டது. இந்த குழுவினர் ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தையை தொடங்கி 8 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்தநிலையில், மத்தியஸ்தர் குழுவினர் இன்று அயோத்தி பயணமாகின்றனர். அங்கு சர்ச்சைக்குரிய இடத்தை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அமைப்பினர்களை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக மத்தியஸ்தர் குழுவினரின் விசாரணை உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் நடைபெற உள்ளது. அதற்கு தேவையான உதவிகளை உ.பி. மாநில அரசு செய்து வருகிறது.