மதுரை:

ட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும்  மதுரை சித்திரைத்திருவிழா நடைபெறும் தேதியில் அறிவிக்கப்பட்ட  தேர்தல் தேதியை ஏன் மாற்றக்கூடாது? என்று தேர்தல் ஆணையத்துக்கு  உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை 14ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

நாடுமுழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி,  தமிழகத்தில் 2வது கட்டமான ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேர்தல் சமயத்தில், மதுரையில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடை பெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்ரல் 8- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 19- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை ஏப்ரல் 18- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாக்கில் பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

இவ்வளவு சிறப்பு மிக்க திருவிழா நேரத்தில், தேர்தல் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டு இருப்பதால், சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. தேர்தல் தேதியை மாற்றி வைக்க கோரி பொதுமக்கள்  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பார்த்தசாரதி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தரம் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட தேர்தல் ஆணையர், மற்றும் காவல்துறையிடம் சரியான விளக்கம் பெற்றுள்ளோம். தேர்தல் அன்று பாதுகாப்பு வழங்க முடியும் காவல்துறை தெரிவித்திருப்பதாகச் சொன்னார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  தேர்தலை பொறுத்தவரை வாக்காளர்களே முக்கிய மானவர்கள். திருவிழா நேரத்தில் நகருக்குள் நுழைவதே சிரமமான ஒன்று. அப்படியிருக் கும்போது வாக்காளர்கள் எப்படி வாக்குசாவடிக்கு செல்வார்கள்?

நூறு சதவிகிதம் வாக்குப்பதிவு என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாக இருக்கும்போது, இதில் ஏன் ஆர்வம் காட்டவில்லை? இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொள்ளாதது துரதிர்ஷ்டமானது.  மதுரையை  பொறுத்தவரை தேர்தல் தேதியை மாற்றி வைக்க முடியுமா? என்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வரும் 14 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.