சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம் -Electronic Voting Machine) தொடர்பாக நடமாடும் செயல் விளக்க வாகனம் செல்லும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக நடமாடும் செயல் விளக்க வாகனம் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் விழிப்புணர்வை ஊக்குவிக்க, இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு முழுவதும் நடமாடும் செயல்விளக்க வாகனம் மற்றும் இவிஎம் செயல்முறை விளக்க மையங்களை தொடங்கியுள்ளது.
வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி வாக்களிப்பின்போது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வதற்கு ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் (38 மாவட்டங்கள்) மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்கள்/ வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்களில் (119 இடங்கள்) இவிஎம் செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களை (33,180) அணுகும் நோக்கத்துடன் நடமாடும் செயல் விளக்க வாகனங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு செயல்முறை தொடர்ந்து நடைபெறும்.இன்றுவரை, 81000க்கும் மேற்பட்ட மக்கள் இவிஎம் செயல்முறை விளக்க மையங்களுக்கு வருகை புரிந்து மாதிரி வாக்களித்துள்ளனர். மொத்தமுள்ள 33,180 வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடமாடும் செயல் விளக்க வாகனங்கள் 10515 வாக்குச்சாவடி அமைவிடங்களை சென்றடைந்துள்ளது
இந்த விளக்க காட்சிகளின் மூலம், பொதுமக்கள் இவிஎம் மற்றும் வி.வி.பேட் மூலம் வாக்களிப்பின் முழு செயல்முறை அதில் வாக்களிப்பது மற்றும் வி.வி.பேட் சீட்டு மூலம் சரிபார்க்கும் முறை ஆகியவற்றை புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. அனைத்து குடிமக்களும் இந்த வசதிகளை பயன்படுத்தி, பொதுத் தேர்தல் அறிவிக்கும் வரை இவிஎம் செயல்முறை விளக்க மையங்களையும் நடமாடும் செயல் விளக்க வாகனத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]