பஞ்சாப்:
பிரபல கிரிக்கெட் வீரரும், பாஜவின் முன்னாள் மேலவை எம்பியுமான சித்து தனிக்கட்சி தொடங்கி உள்ளார். அவரது கட்சியின் பெயர் அவாஸ்-இ-பஞ்சாப்.
பா.ஜனதா சார்பில் மேல்சபை எம்.பி.யாக இருந்த பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, கடந்த சில நாட்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியதுடன், தனது மேல்சபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அவர் ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்து பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதாக பேசப்பட்டது. ஆனால், திடீரென தனிக்கட்சி தொடங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் ஒருசிலர் அறிவுறுத்தலின் பேரில் அவர் தனிக்கட்சி தொடங்கி உள்ளதாக பேசப்படுகிறது. ஏற்கனவே அகாலிதளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெயின் சகோதரர்களுடன் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், அதையடுத்துதான் ‘அவாஸ்இபஞ்சாப்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க சித்து முடிவு செய்தார் என்றும் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, நேற்று அவாஸ்இபஞ்சாப் என்ற பெயரில் தனிக்கட்சியை நவ்ஜோத்சிங் சித்து முறைப்படி தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலத்தை எழுச்சிப் பெற வைப்பதே எங்கள் கட்சியின் நோக்கமாகும். நான் அரசியலில் ஈடுபட்டு வருவது மக்களுக்கு சேவை ஆற்றுவதற்காக மட்டும்தான், சுயலாபத்திற்காக இல்லை. ஒரு நல்ல மனிதர் நூறு கெட்ட மனிதர்களை விட மேலானவர், என்ற எங்களுடைய முழக்கம் பஞ்சாப்பில் எங்களுக்கு நிச்சயம் வெற்றியை கொடுக்கும்.
பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜனதா மற்றும் ஆளும் அகாலி தளம் கட்சிகளை எதிர்க்கும் ஒரு வலிமையான சக்தியாக அவாஸ் இபஞ்சாப் கட்சி திகழும் என்றார்.
மேலும் ஆம்ஆத்மியில் சேர நினைத்தது பற்றி கூறியபோது,
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அனைத்திற்கும் தலைஅசைக்கும் ஒருவர் தான் தேவை என்றார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் தேர்தலில் நான் போட்டியிடக்கூடாது என்று கெஜ்ரிவால் என்னிடம் வற்புறுத்தினார்; அதற்கு பதிலாக ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் எனது மனைவிக்கு மந்திரி பதவி தருவதாகவும் தெரிவித்தார் என்றார்.
ஆனால் அவரது நடவடிக்கை எனக்கு பிடிக்காததால் நான் ஆம்ஆத்மி கட்சியில் சேர மறுத்துவிட்டேன் என்றும் கூறி பரபரப்பை கூட்டினார்.